Friday 29 July 2016

பலா மரத்தையும் முந்திரி மரத்தையும் மட்டுமே நம்பி வாழும் பண்ணுருட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள உழவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்றும்,நாளையும் காடாம்புலியூரில் நடைபெறுகிறது. இத்துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு எவ்வாறு பலா உற்பத்திப்பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி அதிகப்படியான வருவாயை ஈட்டுவது என்பது குறித்து பயிற்றுவிக்கிறார்கள். ஊராட்சி,நகராட்சி நிர்வாகத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக கணினி மயமாக மாற்றி சிறந்த நிர்வாகத்தை நடத்திக்காடியதற்காக பண்ணுருட்டியின் முன்னாள் சேர்மன் திரு. பஞ்சவர்ணம் அவர்களும்,நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் திரு. சபா.இராசேந்திரன் அவர்களும் இணைந்து இம்மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக எனக்கிருந்த கனவு இது என்பதால் நானும் இத்துடன் இணைந்துள்ளேன். இதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் தொழிற்சாலைகள் வியட்நாமில் இருப்பதால் அங்கும் சென்று கண்டுணர்ந்து வந்திருக்கிறேன். இம்முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இனி பலாப்பழங்களை தெருவில் போட்டு கூவிகூவி விற்க வேண்டியதில்லை. நூறு ரூபாய் பலா ஆயிரம் ரூபாய்க்கும், கழிவுகள் என நினைத்துக்கொண்டிருக்கும் அதன் அத்தனைப் பொருட்களையும் பணமாக்கும் செயல் திட்டம் இது. தொடர்ந்து இயற்கையின் பாதிப்புக்குள்ளாகி சோர்ந்துபோய் கைபிசைந்துகொண்டு நிற்கும் இந்த உழவுக்குடி மக்களுடன் இருந்து எனது கருத்துக்களை பகிர்ந்து செயலிலும் இணைகிறேன்.

No comments:

Post a Comment