Friday 10 June 2016

முடிந்தால் வாங்கிப்படிக்கலாம்!
உண்மையான எழுத்தாளன் வாழ்த்துகளை விரும்ப மாட்டான்!!


தங்கர் பச்சான் கதைகள்"- திறனாய்வு
திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன.
முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள், ஒவ்வொரு குடும்பத்தின் பின்னணியிலும் கணவனுக்கு இணையாக நுகத்தடி சுமக்கும் பெண்கள் என நமக்கு அறிமுகமாகும் செம்புலத்தின் எளிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்தக் கதைகளில் உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
அப்பா வாங்கித் தந்த ஷூ
தனக்கு எல்லாமுமாக இருந்த கிராமத்து மண்ணைப் பிரிந்து, நகரத்தில் படித்து, அங்கேயே குடிபெயர்ந்து வாழ நேர்ந்தது தங்கர் பச்சானைப் பொறுத்தவரை பெருந்துயரம். நவீன வாழ்க்கையும் கல்வியும் நகரத்து வாழ்வில் கிடைத்துவிட்டாலும் கிராமத்து வாழ்வின் இழப்புகளை இந்த நகரம் துளியும் ஈடுசெய்ய முடியாமல் தோற்றுவிடுகிறதே என்ற கிராமத்து மனதின் குமுறல்களும் ஏக்கங்களும் தங்கர் பச்சானின் கதைகளில், தூக்கி எறிய மனமில்லாத, அப்பா முதன்முதலாக வாங்கித் தந்த ஷூவைப் போல ஒட்டடை படிந்து இருக்கின்றன.
தான் இழந்துவிட்ட இந்த உலகத்தை எழுத்தில் கட்டியெழுப்ப நகாசுகள், உத்திகள் எதுவும் தங்கர் பச்சானுக்குத் தேவைப்படவில்லை. காட்சி மொழியும் பூடகமில்லாத புனைவின் மொழியும் ஒரு இழையில் தழுவிக்கொள்ளும் அதேநேரம், செம்புல வட்டார வழக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கும் செம்புலச் சொற்களையும் குழைத்து வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது தங்கரின் மொழி. கதை சொல்லல் முறையில் அவர் தேர்ந்துகொண்டிருக்கும் வடிவம், பல கதைகளில் தேர்ந்த திரைப் பிரதிகளாக இருப்பதை வாசகர்கள் அவதானிக்க முடியும்.
ஊருக்கெல்லாம் மாடு வாங்கிக்கொடுத்தாலும் தரகுப் பணமென்று பத்து பைசா வாங்காதவர் சொக்கலிங்கம். தனது குடும்பத்துக்கென்று ஒரு ஜோடி மாடுகளை வாங்கி வருகிறார். மாடுகள் அவர்களது குடும்பத்தில் மேலும் இரண்டு பிள்ளைகளாக மாறுகின்றன. வாழ்வு தரும் நெருக்கடியில் விற்க நேர்ந்துவிடும் அந்த மாடுகளில் ஒன்றைத் திரும்பவும் எப்படிப் பார்க்கக் கூடாதோ அப்படிப் பார்க்கும் சொக்கலிங்கத்தையும் அவரது மூத்த மகனையும்போல அந்த ‘வெள்ளை மாடும்’ ரத்தமும் சதையுமாக வாசகனைத் தலையாட்டி அழைக்கும் பாசமும் ஏக்கமும் கொண்டது. வண்டிக்காரனிடம் அந்த மாடு வாங்குகிற ஒவ்வொரு அடியின் வலியையும் வாசிப்பின்போது உணர வைத்துவிடும் எழுத்து.
‘குடி முந்திரி’ கதையில் மனைவி தூக்கி எறிய நினைக்கும் பழைய ‘ஷூ’விலிருந்து கதையாசிரியனின் மனம் பின்னோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்கித்தருவதற்காகக் குடும்பத்தின் பாரம்பரியச் சொத்தான முந்திரி மரத்தை வெட்டுகிறார் கையில் 100 ரூபாய்கூட இல்லாத விவசாயத் தகப்பன்.
அறச்சீற்றம்
இந்தக் கதையில் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங் களிடமும், ரியல் எஸ்டேட்காரர்களிடமும், கல்வி வியா பாரிகளிடமும் நிலத்தையும் மொழியையும் இழந்து நிற்கும் தமிழர்களுக்கு நுட்பமாகவும் நேரடியாகவும் செய்தி சொல்லிக்கொண்டே இருக்கிறார் தங்கர். கதையின் தொடக்கமாகவோ இடையீடாகவோ சமூக அவலங்களைப் பெருங்கவலையுடனும் பொங்கும் அறச்சீற்றதுடனும் உறைக்கிற மாதிரி சொல்லிச் செல்வதில் தங்கர்பச்சானுக்கு எந்த மனத்தடையும் இல்லை. அதேநேரம் நகரத்தில் எல்லாம் கிடைத்துவிடும் என்று குடிபெயர்ந்து வாழத் துடிப்பவர்களுக்கு, நகரம் பற்றிய தன் பயத்தையும் கவலைகளையும் தெரிவிப்பது முரணாகப் பதிவாகியிருக்கிறது.
மீட்சியற்றவர்களாகவே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும்கூடப் பெண் களைக் கைதூக்கிவிடத் தவறிவிட்ட சமூகத்தின் மீது எழுத்தாளருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப் பாடாகவே எடுத்துக்கொள்ளலாம்.
பலாக் காயை வெட்டி, கயிறு கட்டி மரத்திலிருந்து இறக்கும்போது வடியும் பாலிலிருந்து நாசியை எட்டும் வாசம், குதிரில் வைக்கப்பட்ட காய் பழுத்த பிறகு நாசியைத் தேடிவந்து வாயில் உமிழ்நீர் சுரக்கவைக்கும் பலாப்பழத்தின் வாசம் என்று உழுது கிளர்ந்த செம்மண் வாழ்வும் அவர்களுக்கே உரித்தான சடங்குகளும் இந்தக் கதைகளில் அசலாக இருக்கின்றன.
தங்கர் பச்சான் கதைகள்- நூல் கிடைக்குமிடம்.
சென்னை புத்தகச்சந்தையில்-
டிஸ்கவரி புக் பேலஸ்- அரங்கு எண்-105,106,160,161.
தொலைபேசி: 044-65157525
கைப்பேசி:+91 8754507070

No comments:

Post a Comment