Tuesday 24 June 2014

தமிழ் (நம்) உடைமை



            ஆண்டுக்கொரு நாள் மட்டும் நான் கண்ணதாசன் அவர்களை நினைப்பதில்லை. என் உயிரிலும், இரத்தத்திலும் கலந்துவிட்டவை பழைய தமிழ் திரைப்படப் பாடல்கள். நான்கு வயதில் முதல் சினிமா பார்க்கத் தொடங்கியதிலிருந்து இன்னும் நான் சினிமாவுக்குள்ளேயேதான் கிடக்கிறேன்.
            மெட்டு, ராகம், இசை, பாடல் வரிகள், குரல் வளம் இவை எல்லாம் நம் மனதைத் தொடுபவைகளாக இருந்தால்தான் அவைகள் காலம் கடந்த பாடல்கள்.காதலின் நுட்பங்களை உணரச்செய்து மனதிற்குள் அதிர்வை உருவாக்கி அதன் மகத்துவத்தை எத்தனையோப் பாடல்கள்  உணர்த்தியிருக்கின்றன. தாய் தந்தையரை நினைத்து அழவைத்தும், உடன்பிறந்தோரை பார்க்கும்படியான ஏக்கத்தையும், தனிமைக்கான துணையையும்,தளர்ந்து விழும்போது வாழ்க்கைக்கான நம்பிக்கைகளையும் விதைத்தவை பழைய திரைப்பாடல்கள்.
            முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் சேர்த்துவைத்த சொத்தில் முதன்மையானதாக என்னிடத்தில் இருப்பது சுமார் நாநூறு மணிநேரம் கேட்கும் அளவிற்கான பழைய பாடல்கள்.
                உலகத்திரைப்படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு கவனத்துடன் பார்க்கின்றேனோ, இலக்கிய நூல்களைப் படிக்கின்றபோதும் எவ்வாறு ஆழ்ந்து அதனுடன் பயணம் செய்கின்றேனோ அதேபோல்தான் கவிஞரின் பாடல்களை கேட்கும்போது மெய்மறந்து நிற்கின்றேன். அனைத்துத் தமிழனின் மனதோடு உறவாடி ஊடுருவிய  அவரின் வரிகள்   என்னை கர்வம் கொள்ளச் செய்கின்றன. ஆண்டுக் கணக்கில் இதைப் பற்றி பேசிக்கொண்டேயிருப்பேன். என்னைப் பைத்தியகாரன் எனக்கூட சொல்லத்தோன்றும் . எத்தனை விதமான சூழ்நிலைகள், எத்தனைவிதமான உறவுகள், எத்தனை விதமான மனநிலைகள் என எல்லாவற்றுக்கும் எங்கிருந்துதான் அவருக்கு சொற்கள் பிறந்ததோ!! ஒவ்வொரு பாடலின் போதும் உயர்ந்துகொண்டே போகின்றார். நாள்தோறும் நான் வணங்கும் கடவுளாக கண்ணதாசன் இருக்கிறார்.


                அவர் எந்தப்பட்டத்துக்காகவும் ஏங்கவில்லை. விருதுகளுக்காக ஆள்பிடித்து அலைந்தவரில்லை. வாழ்ந்து கொண்டேயிருப்பார் இந்த உலகம் உள்ளவரை. அவரின் எழுத்துக்கள் என் உடைமை, என் பிள்ளைகளின் உடைமை, நம் இனத்தின் உடைமை, நம் மொழியின் உடைமை.

No comments:

Post a Comment